மட்டக்களப்பு மாவடிவேம்பு ‘உயிரிழை’ நிலையத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் மற்றும் ரோட்டரி பிரதானிகள் மீண்டும் நேரடி விஜயம்: குடிநீர் வசதி மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு!

மட்டக்களப்பு, மாவடிவேம்பு கிராமத்தில் இயங்கிவரும் ‘உயிரிழை’ முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பின் உப பராமரிப்பு நிலையத்திற்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் இந்திய தமிழ்நாடு ரோட்டரி கிளப் பிரதானி திரு. தனசேகரன் ஆகியோர் நேற்று முன்தினம் (19.07.2026) மீண்டும் நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் விசேட வேண்டுகோளுக்கு இணங்க இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த ஜூன் 08-ஆம் திகதி குறித்த உப பராமரிப்பு நிலையத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு ரோட்டரி கிளப் பிரதானியும் நேரடி கள விஜயம் மேற்கொண்டிருந்த போது, அங்குள்ள பாதிப்புற்றோரால் குடிநீர் பிரச்சினை தொடர்பில் அவசர கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, நீர் வழங்கல் அபிவிருத்தி அதிகார சபையுடன் கலந்துரையாடப்பட்டு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இந்திய தமிழ்நாடு ரோட்டரி கிளப்பின் நிதி அனுசரணையோடும், ஏறாவூர்பற்று பிரதேச சபையின் ஒருங்கிணைப்போடும் அவசர தேவையாக இருந்த குடிநீர் வசதியை அமைத்துக் கொடுக்கும் திட்டப்பணிகள் எதிர்வரும் நாட்களில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.

Advertisement

இந்த விஜயத்தின் சிறப்பம்சமாக, இந்திய தமிழ்நாடு ரோட்டரி கிளப்பின் நிதிப் பங்களிப்பில், நிலையத்தில் தங்கியுள்ள முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோருக்காக ஒரு தொகுதி சற்கர நாற்காலிகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன. மேலும், பாதிக்கப்பட்ட நபர்கள் முன்வைத்த ஏனைய கோரிக்கைகளுக்கு அமைவாக, பராமரிப்பு நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அவசியமான தேவைகளை மிக விரைவில் பூர்த்தி செய்து தருவதாக நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய தன்னார்வ அமைப்பின் பிரதானிகளும் உறுதியளித்தனர்.

இந்நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் த.பிரபாகரன், மட்டக்களப்பு சிட்டி ரோட்டரி கிளப் பிரதிநிதி திரு. ஜெகவண்ணன் மற்றும் ‘உயிரிழை’ அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Advertisement