யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 41ஆவது நாளான நேற்றைய தினம் 7 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் 9 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
குறித்த அகழ்வுப் பணியின்போது மூன்று என்புக் குவியல்கள் அடையாளம் காணப்பட்டதுடன், சில ஆணிகளும் சீமெந்து துண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரை 95 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை மொத்தம் 478 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுள் 464 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.