சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலனறுவை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலை உணரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பகுதிகளில் மழை பெய்யக்கூடுவதுடன், காங்கேசன்துறை தொடக்கம் சிலாபம் வரையான மற்றும் மாத்தறை தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Add a comment