மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக டெங்கு நோயின் தாக்கம் பாரியளவில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பொதுமக்களின் அலட்சியமான போக்குகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி. முரளிஸ்வரன் எச்சரித்துள்ளார். மட்டக்களப்பு, செங்கலடி மற்றும் வவுணதீவு ஆகிய பகுதிகளில் அதிகளவான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை (மார்ச் 16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார். (தொடர்ந்து வாசிக்க…)
வெற்றுக்காணிகளைத் துப்பரவு செய்யாது டெங்கு நுளம்புகள் பெருக இடமளிக்கும் காணி உரிமையாளர்களுக்கு எதிராக மாநகர சபையூடாகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். “வெளிநாடுகளில் இருந்துகொண்டு காணிகளைப் பராமரிக்கத் தவறுபவர்கள் மற்றும் அறிவுறுத்தல்களை மீறி அடாவடியாகச் செயல்படுபவர்களின் காணிகள் சில ஏற்கனவே மாநகர சபையினால் சுவீகரிக்கப்பட்டுள்ளன. சமூக அக்கறையின்றிச் செயல்படும் இவர்களால் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது” என அவர் காட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், மத நிறுவனங்கள் மற்றும் பாடசாலை அதிபர்களின் ஒத்துழைப்பின்மை குறித்தும் அவர் விசனம் தெரிவித்தார்:
- சமய நிறுவனங்களுக்குச் சாடல்: செங்கலடியில் உள்ள ஒரு பிரபல ஆலயம் டெங்கு விழிப்புணர்வுக்கு ஒத்துழைக்க மறுத்ததோடு, அந்த ஆலயச் சூழலிலேயே டெங்கு நுளம்புகள் பெருகியிருந்ததால், மதகுரு உள்ளிட்டவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆலயங்கள் ஆன்மீகத்தை மட்டும் வளர்க்காமல் சமூக நலனிலும் அக்கறை காட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
- மாணவர் உளநலம்: மாவட்டத்தில் அதிகரித்து வரும் தற்கொலைகளைத் தடுக்க, பயிற்சி பெற்ற ‘உளவள ஆற்றுப்படுத்தல்’ ஆசிரியர்களுக்கு முறையான பாடவேளைகளை ஒதுக்க அதிபர்கள் முன்வர வேண்டும். மாணவர்களை அழுத்தங்களுக்கு உள்ளாக்காது வாரத்தில் ஒரு நாளாவது அவர்களது உளநலம் குறித்துப் பேச இடமளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
- நுண்கடன் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்: தற்கொலைகளுக்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கும் நுண்கடன் விவகாரங்களைக் கையாள, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பொதுமக்களுக்குச் சரியான நிதி வழிகாட்டல்களை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.