விவசாயக் காணிப் பிரச்சினை, ஆசிரியர் தட்டுப்பாடு மற்றும் உட்கட்டமைப்புச் சவால்களுக்கு உடனடித் தீர்வு கோரி டாக்டர் இ. சிறிநாத் அதிரடி நடவடிக்கை; நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசனும் பங்கேற்பு!

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் தீர்க்கப்படாத காணி விவகாரங்கள், கல்விச் சவால்கள் மற்றும் வாழ்வாதாரக் குறைபாடுகளுக்குத் தீர்வு காணக் கோரி, கிழக்கு மாகாண கௌரவ ஆளுநரிடம் டாக்டர் இ. சிறிநாத் அவர்கள் இன்று உத்தியோகபூர்வமான கோரிக்கை மனுவொன்றைச் சமர்ப்பித்துள்ளார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் அவர்களும் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

காணி மற்றும் வாழ்வாதாரக் கோரிக்கைகள்: 2018 ஆம் ஆண்டு முதல் இழுபறியிலுள்ள விவசாயிகளுக்கான மாற்று காணி வழங்கும் பணிகளை மாகாண காணி ஆணையாளர் உடனடியாக நிறைவு செய்ய வேண்டும் என அந்த மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், வாழைச்சேனை – கருங்காலிச்சோலை மற்றும் மீராவோடை பகுதி மக்களின் நீண்டகாலத் தேவைகளான விளையாட்டு மைதானம் மற்றும் மயானத்திற்காகக் காணிகளை விரைவாக விடுவிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. மீயங்கல் மதகு, வண்ணாத்தி ஆறு அணைக்கட்டு மற்றும் கிரான், செங்கலடிப் பகுதிகளில் சிதிலமடைந்துள்ள விவசாய வீதிகள் மற்றும் பாலங்களைப் புனரமைப்பதன் அவசியத்தையும் டாக்டர் சிறிநாத் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வி மற்றும் இளைஞர் நலன்: கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயங்களில் நிலவும் பாரிய ஆசிரியர் தட்டுப்பாட்டினால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், பாடசாலைகளுக்கான தளபாடங்கள் மற்றும் கட்டிட வசதிகளைப் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், பின்தங்கிய பகுதி மாணவர்களுக்காக மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குப் பிரத்தியேக பேருந்துச் சேவையை ஏற்படுத்தவும், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கச் செங்கலடி, வாழைச்சேனை, வாகரை ஆகிய பகுதிகளில் விளையாட்டு உத்தியோகத்தர்களை நியமிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நிர்வாகத் தாமதங்கள் மாவட்டத்தின் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் டாக்டர் சிறிநாத், இது தொடர்பாக ஆளுநர் அவர்கள் உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரைகளை வழங்கி, தேவையான நிதி ஒதுக்கீடுகளைச் செய்வார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.