இலங்கை கிரிக்கெட்டை மீட்க இடைக்காலக் குழு? ஐசிசியுடன் அரசு அதிரடி பேச்சுவார்த்தை; அநுர குமார திசாநாயக்கவின் நேரடித் தலையீடு!

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் நிலவும் முறைகேடுகளைக் களைந்து, விளையாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக கிரிக்கெட் நிர்வாகத்தை ஒரு இடைக்காலக் குழுவிடம் (Interim Committee) ஒப்படைப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் (ICC) பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே இன்று (05) அமைச்சில் நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பின் போது இந்த அதிரடித் தகவலை வெளியிட்டார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நேரடி வழிகாட்டலின் கீழ், கிரிக்கெட் விளையாட்டைச் சீரமைக்க அரசு முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். (தொடர்ந்து வாசிக்க…)

முன்னர் இலங்கை கிரிக்கெட் மீது ஐசிசி விதித்திருந்த தடையினால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைக் கருத்திற்கொண்டு, இம்முறை ஐசிசியின் முழுமையான இணக்கப்பாட்டுடன் மட்டுமே மாற்றங்கள் கொண்டுவரப்படும் என அமைச்சர் வலியுறுத்தினார். “மீண்டும் ஒரு சர்வதேசத் தடையைப் பெற்றுக்கொண்டு கிரிக்கெட்டை மேம்படுத்த முடியாது. எனவே, விளையாட்டைப் பாதுகாத்துக்கொண்டே நிர்வாகச் சீர்திருத்தங்களைச் செய்வது குறித்து அவதானம் செலுத்தப்படுகிறது. ஜனாதிபதி மற்றும் ஐசிசி அதிகாரிகளுடனான கலந்துரையாடல்களின் முடிவிலேயே அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்” என அமைச்சர் கமகே சுட்டிக்காட்டினார்.

கிரிக்கெட் மேம்பாட்டிற்கான வரைவுத் திட்டங்கள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றை உடனடியாகச் செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நிர்வாகப் பொறுப்பை எவர் மீதும் சுமத்திவிட்டு ஒதுங்கிவிட முடியாது எனத் தெரிவித்த அமைச்சர், இந்த மறுசீரமைப்பு காலத்தில் கிரிக்கெட் வீரர்களை அவமரியாதை செய்யும் விதமாக அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். நாட்டின் கௌரவமாகப் பார்க்கப்படும் கிரிக்கெட் விளையாட்டைப் பழையபடி முதலிடத்திற்குக் கொண்டு வருவதே அரசாங்கத்தின் இலக்கு என அவர் இதன்போது உறுதிபடத் தெரிவித்தார்.

Advertisement

Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Advertisement