வடகிழக்கில் தொல்லியல் திணைக்களத்தின் ஊடாகச் சட்டரீதியான தோற்றத்தைக் காட்டி, திட்டமிட்ட முறையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களைப் பறித்தெடுத்து அவர்களின் வாழ்வாதார நிலங்களைச் சிதைக்கும் நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மிக நுட்பமான முறையில் முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இளையதம்பி சிறிநாத் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (03) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்த முக்கிய கருத்துக்கள்:
சமகால அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தபோதிலும், ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை வருடங்கள் கடந்தும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைச் சம்பந்தமாக எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கப்படாத ஒரு நெருக்கடி நிலைமையே தொடர்கிறது. தமிழ் மக்களுக்கு ஒரு பூரணப்படுத்தப்படாத தீர்வாக இருப்பினும், 13ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் கிடைத்த மாகாணசபை முறைமை கூடத் தொடராமல் அல்லது உறுதிப்படுத்தப்படாமல் முடக்கப்பட்டுள்ள நிலை காணப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கேள்விகளை எழுப்பியிருந்தோம். குறிப்பாக, மாவட்டத்தின் விவசாயம், பொருளாதாரம், மீன்பிடி, வெள்ளத் தடுப்பு மற்றும் எதிர்காலக் குடிநீர் தேவைகளைக் கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய ‘கித்துள் முந்தனை ஆறு நீர்ப்பாசனத் திட்டம்’ தொடர்பில் ஆய்வுகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் வெறும் ஒரு வீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கைகள் காட்டுகின்றன. இது மிகுந்த மனவருத்தத்தை அளிப்பதுடன், இதுகுறித்து நாம் கேள்வி எழுப்பியபோதிலும் உரிய தீர்வுகள் இதுவரை முன்வைக்கப்படவில்லை.
அதேபோல், கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரமான மயிலத்தமடு – மாதவணைப் பகுதியில் மேய்ச்சல் தரையை விடுவிப்பதற்காக ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட போதிலும், அதற்கான செயற்பாடுகள் இன்னமும் மிக மந்தமான நிலையிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.
#Batticaloa #DrSrinathMP #ArchaeologicalLandGrab #Mayilathmadu #TamilRights #SriLankaPolitics #TamilNews #BreakingNewsTamil