இலங்கையின் தங்கச் சந்தையில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த தற்காலிக வீழ்ச்சி முடிவுக்கு வந்து, தற்போது தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயரத் தொடங்கியுள்ளது. கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின்படி, இன்றைய தினம் (மார்ச் 26, 2026) தங்கத்தின் விலை 4 இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளமை நுகர்வோர் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (தொடர்ந்து வாசிக்க…)
இன்றைய தங்க விலை விபரங்கள் மற்றும் உலகச் சந்தை நிலவரம் வருமாறு:
கொழும்பு செட்டியார்தெரு நிலவரப்படி, இன்று 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 393,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. அதேவேளை, ஆபரணத் தங்கமான 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 361,500 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிலவிய விலையுடன் ஒப்பிடுகையில், இது கணிசமான உயர்வாகும்.
சர்வதேசச் சந்தையில் தங்கம் ஒரு அவுண்ஸ் 4,400 முதல் 4,500 டொலர்களுக்கு இடைப்பட்ட விலையில் வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய தினசரி வர்த்தகத்தில் அதிகபட்சமாக 4,544 டொலர்கள் வரையிலும், குறைந்தபட்சமாக 4,415 டொலர்கள் வரையிலும் விலை ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளது. அண்மையில் உலகச் சந்தையில் தங்கத்தின் விலை 5,000 டொலர்களைக் கடந்திருந்த நிலையில், தற்போது சிறிய வீழ்ச்சியைக் கண்டிருந்தாலும் இலங்கையில் டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக உள்நாட்டில் விலை உயர்வு தொடர்கிறது.
மத்திய கிழக்கில் நிலவும் ஈரான் – இஸ்ரேல் போர்ச் சூழல் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தைத் தெரிவு செய்வதால், உலகளாவிய ரீதியில் தங்கத்திற்கான கேள்வி அதிகரித்துள்ளது. இதுவே இலங்கையிலும் தங்க விலை மீண்டும் 4 இலட்சம் ரூபாவை நோக்கி நகர பிரதான காரணமாக அமைந்துள்ளது.