இலங்கை

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையர் அனோஜன் சிவராசா விடுதலை: அரசாங்கம் வரவேற்பு!

சவுதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவிற்கு எதிராகத் தொடரப்பட்டிருந்த வழக்குகள் அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு அவர் விடுவிக்கப்பட்ட

செய்தியாளர்: மட்டக்களப்பு நிருபர்•வியாழன், 12 நவம்பர், 2026
7584 பார்வைகள்•மூலம்: தாயகத் தமிழ் (thayakatamil.com)
Read this story in other languages:
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையர் அனோஜன் சிவராசா விடுதலை: அரசாங்கம் வரவேற்பு!
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையர் அனோஜன் சிவராசா விடுதலை: அரசாங்கம் வரவேற்பு!
பகிர்க:WhatsAppFacebookX (Twitter)Telegram

சவுதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவிற்கு எதிராகத் தொடரப்பட்டிருந்த வழக்குகள் அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டுள்ளமையை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது.

முன்னதாக அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி சவுதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததுடன், வழக்கை மறுவிசாரணைக்கு அனுப்ப உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் பொது வழக்குரைஞர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளுக்குப் பின்னர் குறித்த வழக்கு முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த அனைத்துத் தண்டனைகளும் ரத்து செய்யப்பட்டு செல்லுபடியற்றதாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் இன்றைய தினம் அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்துப் பேசினார். வழக்கின் சாதகமான முடிவு குறித்தும், அனோஜனை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்தும் அவர் குடும்பத்தினருக்கு விரிவாக விளக்கமளித்தார்.

இந்த விவகாரத்தில் மனிதாபிமான ரீதியில் ஒத்துழைப்பு வழங்கிய சவுதி அரேபிய அதிகாரிகளுக்கு இலங்கை அரசாங்கம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ளது. மேலும், ரியாத் நகருக்கு நேரடியாகப் பயணம் மேற்கொண்டு சட்டப் பணிகளை முன்னெடுத்த இலங்கைச் சட்ட நிபுணர்கள் மற்றும் சவுதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் இராஜதந்திர முயற்சிகளுக்கும் வெளிவிவகார அமைச்சு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. அனோஜனை விரைவாகத் தாய்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான எஞ்சிய நிர்வாக நடைமுறைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தற்போது சவுதி அதிகாரிகளுடன் இணைந்து வெளிவிவகார அமைச்சு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TAGS:
#இலங்கை#தாயகத் தமிழ்#செய்திகள்#இலங்கை