இலங்கைமுக்கிய செய்திகள்

நக்கிள்ஸ் வனப்பகுதி குகையிலிருந்து 15 வயது சிறுமியும் பச்சிளம் குழந்தையும் மீட்பு: மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உருக்கமான அறிக்கை!

நக்கிள்ஸ் (Knuckles) வனப்பகுதியில் பாதுகாப்பற்ற பிரசவத்தைத் தொடர்ந்து பிறந்த இரண்டு மாதப் பச்சிளம் குழந்தையுடன் 15 வயதுடைய சிறுமியொருவர் குகையிலிருந்து மீட்கப்ப

செய்தியாளர்: மட்டக்களப்பு நிருபர்•ஞாயிறு, 15 நவம்பர், 2026
9686 பார்வைகள்•மூலம்: தாயகத் தமிழ் (thayakatamil.com)
Read this story in other languages:
நக்கிள்ஸ் வனப்பகுதி குகையிலிருந்து 15 வயது சிறுமியும் பச்சிளம் குழந்தையும் மீட்பு: மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உருக்கமான அறிக்கை!
நக்கிள்ஸ் வனப்பகுதி குகையிலிருந்து 15 வயது சிறுமியும் பச்சிளம் குழந்தையும் மீட்பு: மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உருக்கமான அறிக்கை!
பகிர்க:WhatsAppFacebookX (Twitter)Telegram

நக்கிள்ஸ் (Knuckles) வனப்பகுதியில் பாதுகாப்பற்ற பிரசவத்தைத் தொடர்ந்து பிறந்த இரண்டு மாதப் பச்சிளம் குழந்தையுடன் 15 வயதுடைய சிறுமியொருவர் குகையிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம், ஒரு தாயாகவும் மனிதப் பிறவியாகவும் தமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் மனவேதனையையும் அளிப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்த சிறுமியினதும் பச்சிளம் குழந்தையினதும் உயிர்கள் தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டியுள்ளன என்பது சற்று ஆறுதலளிக்கும் விடயமாகும் எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சர், இவ்விரு பிள்ளைகளினதும் உடல் மற்றும் உள நலனைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் எதிர்கால நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து அரசாங்கத் தலையீடுகளையும் உடனடியாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தை ஒரு தனிப்பட்ட நிகழ்வாக மாத்திரம் கருத முடியாது எனச் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், இன்று சமூகத்தில் நிலவும் பல்வேறு பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சிக்கல்கள் பிள்ளைகளைப் பல்வேறு வடிவங்களில் பாதிப்புக்குள்ளாக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாகப் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இருக்க வேண்டிய பரஸ்பர உறவும், வெளிப்படையான கலந்துரையாடலும் படிப்படியாகப் பலவீனமடைந்து வருகின்றமையே இத்தகைய துயரச் சம்பவங்கள் இடம்பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும், இதனால் பிள்ளைகள் தமக்கு மிகவும் நெருக்கமானவர்களிடமிருந்தே பாதுகாப்பற்ற தன்மையை எதிர்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எத்தகைய சூழ்நிலைகள் நிலவினாலும், பெற்றோராகிய அனைவரும் “நான் எனது பெற்றோருடன் பாதுகாப்பாக இருக்கிறேன்” என்ற அசைக்க முடியாத நம்பிக்கையையும் துணிச்சலையும் தமது பிள்ளைகளின் மனங்களில் விதைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்பான குடும்பச் சூழலை உருவாக்குவதும், வீட்டிற்குள் வெளிப்படையான கலந்துரையாடலை ஊக்குவிப்பதும் இத்தகைய ஆபத்தான சம்பவங்களைத் தடுப்பதற்குப் பெருமளவில் துணைபுரியும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர், பாதிப்புக்குள்ளானவர்களுடன் பணியாற்றும் அரச நிறுவனங்கள் மற்றும் தரப்பினர் பொதுமக்களால் இலகுவாக அணுகக்கூடிய நம்பிக்கைக்குரிய கட்டமைப்புகளாக மாற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் சிக்கும் பிள்ளைகளுக்கான கட்டமைக்கப்பட்ட மற்றும் நிலையான தீர்வாக 2027ஆம் ஆண்டு முதல் புதிய “மாற்றுப் பராமரிப்புக் கொள்கை” (Alternative Care Policy) ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு, வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வது உட்படத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு முன்னெடுத்து வருவதாக அவர் அறிவித்துள்ளார். சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் முழுச் சமூகத்தினதும் கூட்டுப் பொறுப்பாகும் என்பதால், நாட்டின் பிள்ளைகளின் நல்வாழ்வு குறித்து அதிக உணர்திறனுடனும் விழிப்புணர்வுடனும் செயற்படுமாறு அனைத்துப் பிரஜைகளையும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

TAGS:
#இலங்கை#தாயகத் தமிழ்#செய்திகள்#இலங்கை