அனர்த்த முன்னாயத்த கூட்டங்களில் பங்கேற்காத அதிகாரிகளே அசம்பாவிதங்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டும்: ஆலையடிவேம்பில் தீர்மானம்!
அனர்த்த முகாமைத்துவ முன்னாயத்த கூட்டங்களில் வருகை தராத அரச திணைக்களங்களின் அதிகாரிகளே அனர்த்தம் ஏற்படுகையில் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என ஆலையடிவேம்பு ப

அனர்த்த முகாமைத்துவ முன்னாயத்த கூட்டங்களில் வருகை தராத அரச திணைக்களங்களின் அதிகாரிகளே அனர்த்தம் ஏற்படுகையில் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விசேட அனர்த்த முகாமைத்துவக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அவ்வாறு வருகை தராத அதிகாரிகள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு உயர் மட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ் தலைமையில், பிரதேச அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் வசந்தனின் ஒருங்கிணைப்பில் இன்று (11) இக்கூட்டம் இடம்பெற்றது. இதில் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் கலந்துகொண்டு அனர்த்த முகாமைத்துவ முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்துத் தெளிவூட்டினார்.
கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த பிரதேச செயலாளர், கடந்த கால அனர்த்த நிலைகளின் போது பெற்ற அனுபவங்களை அடிப்படையாக வைத்துப் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். குறிப்பாக வடிகான்களைச் சுத்திகரித்தல், வடிகான் இல்லாத பகுதிகளில் நீர் வடிந்தோட தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொள்ளல், அனர்த்தத்தின் போது தற்காலிக முகாம்களை அமைத்தல், நீர்நிலைகளில் காணப்படும் சல்வீனியா தாவரங்களை அகற்றுதல் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நிதியுதவிகளை வழங்குதல் உள்ளிட்ட முக்கிய செயற்பாடுகளை அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து உரையாற்றிய அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் றியாஸ், அனர்த்தங்கள் தொடர்பில் அரசாங்கம் பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். அனர்த்தத்தால் பாதிக்கப்படக்கூடிய மக்களை முன்னரே இனங்கண்டு அவர்களுக்கு நிதியுதவி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அனர்த்தம் நிகழும் முன்னரே உரிய திணைக்களங்கள் ஒருங்கிணைந்து செயலாற்றினால் மட்டுமே பொதுமக்களைப் பாதுகாக்க முடியும் என்றார். எனவே, அரச திணைக்கள அதிகாரிகள் இவ்வாறான முன்னாயத்தக் கூட்டங்களில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்றும், இல்லாத பட்சத்தில் இக்கூட்டங்கள் பயனற்றதாகிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
