1990 ‘சுவ செரிய’ அவசர நோயாளர் காவு வண்டிச் சேவைக்கு மேலும் 100 ஆம்புலன்ஸ்களை வழங்க இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!
இந்திய அரசாங்கத்தின் 1,725.73 மில்லியன் இலங்கை ரூபா நிதியுதவியுடன், இலங்கையின் 1990 ‘சுவ செரிய’ (Suwa Seriya) அவசர நோயாளர் காவு வண்டிச் சேவைக்கு…

இந்திய அரசாங்கத்தின் 1,725.73 மில்லியன் இலங்கை ரூபா நிதியுதவியுடன், இலங்கையின் 1990 ‘சுவ செரிய’ (Suwa Seriya) அவசர நோயாளர் காவு வண்டிச் சேவைக்கு மேலும் 100 ஆம்புலன்ஸ்களை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று புதன்கிழமை (11) கைச்சாத்திடப்பட்டது.
கொழும்பில் நடைபெற்ற முதலாவது பிம்ஸ்டெக் (BIMSTEC) சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா மற்றும் இலங்கையின் சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோரின் முன்னிலையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் சுகாதார, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுப் பரிமாறிக்கொண்டனர்.
இலங்கைத் தலைவர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், தற்போதுள்ள ‘சுவ செரிய’ தொகுப்பில் நவீன வசதிகளுடன் கூடிய மேலும் 100 ஆம்புலன்ஸ்கள் இணைக்கப்படவுள்ளன. இதன் ஊடாக, அவசர காலங்களில் உதவி தேவைப்படும் இடத்திற்கு நோயாளர் காவு வண்டி சென்றடையும் நேரத்தை 10 நிமிடங்களுக்கும் குறைவாகக் குறைப்பதே பிரதான நோக்கமாகும்.
‘சுவ செரிய’ அவசர சேவையானது ஆரம்பத்தில் 2016 ஜூலை மாதம் இலங்கையின் மேல் மற்றும் தெற்கு மாகாணங்களில் இந்திய அரசாங்கத்தின் 7.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் 88 ஆம்புலன்ஸ்களுடன் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2018 ஜூலை மாதம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அப்போதைய இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரால் இச்சேவை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்பட்டதுடன், இதற்காக இந்தியா மேலும் 15.02 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கி 209 ஆம்புலன்ஸ்கள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்குப் பங்களிப்புச் செய்திருந்தது.
இலங்கையின் சுகாதாரத் துறையில் இந்தியாவின் மேம்பாட்டு ஒத்துழைப்பானது, கோவிட்-19 மருத்துவ உதவிகள், டிக்கோயா (Dickoya) மருத்துவமனை நிர்மாணம், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மற்றும் கிளிநொச்சி, வவுனியா மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு, மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் புதிய சத்திரசிகிச்சைப் பிரிவு அமைத்தல் உள்ளிட்ட பல மக்கள் நலன்சார் திட்டங்களை உள்ளடக்கியுள்ளது. அத்துடன், மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு மேம்பாடு, முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் மருத்துவ வார்டு வளாக நிர்மாணம் மற்றும் தெனியாய (Deniyaya) ஆதார மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்குதல் ஆகிய திட்டங்களும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
