“ஜே.வி.பி-யின் நிகழ்ச்சி நிரலில் பொலிஸ் மா அதிபர்!” – நாமல் ராஜபக்ஷ கடும் தாக்குதல்; சாட்சியாளர்களை அச்சுறுத்தி வாக்குமூலம் பெறுவதாகக் குற்றச்சாட்டு!

பொலிஸார் அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி சாட்சியாளர்களை அச்சுறுத்தி வாக்குமூலங்களைப் பெற்று வருவதாகவும், பொலிஸ் மா அதிபர் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பெலவத்த காரியாலயத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகச் செயற்படுவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், பொலிஸ் திணைக்களம் தற்போது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியதுடன், தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காகச் சாட்சியாளர்களை அச்சுறுத்தி வாக்குமூலங்களைப் பெறும் பொலிஸாரின் இவ்வாறான செயற்பாடுகள் ஒருபோதும் வெற்றிபெறாது என எச்சரித்தார்.

மேலும், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைச் சாட்டி மக்கள் மீது ஒட்டுமொத்தப் பொருளாதாரச் சுமையையும் திணிக்க அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது எனவும், இவ்வாறான நெருக்கடிகளைக் கையாளும் திறன் தற்போதைய அரசாங்கத்திடம் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். கொவிட் பெருந்தொற்று காலத்தில் நாடு நெருக்கடியில் இருந்தபோது மக்கள் விடுதலை முன்னணி அதனைத் தனது அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்தியதுடன் மக்களை வீதிக்கு இறக்கிப் போராட்டங்களைத் தூண்டியதாகச் சாடிய அவர், இருப்பினும் தாம் அவ்வாறு மக்களை வீதிக்கு இறக்கி அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தப் போவதில்லை என உறுதியளித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் மின்னுற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இதனால் பல பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். அரசாங்கம் இதனை மறைக்க முயன்றாலும் உண்மைகள் வெளிவந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சிகளை விமர்சித்துக் கொண்டிருக்காமல் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார். குறிப்பாக எரிபொருள் தட்டுப்பாடு குறித்துத் தாம் முன்கூட்டியே எச்சரித்தபோது அரசாங்கம் அதனைப் பொருட்படுத்தவில்லை என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

Advertisement


Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Advertisement