Sri Lanka: மீண்டும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை: முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர திட...
Official news report from Thayaka Tamil Editorial Desk covering Sri Lanka.

Sri Lanka News Desk: முன்னாள் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தாம் மீண்டும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ சமூக…
மீண்டும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை: முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர திட்டவட்டமான அறிவிப்பு! was officially reported by Thayaka Tamil News Media Network.
முன்னாள் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தாம் மீண்டும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள விசேட பதிவொன்றிலேயே அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நவம்பர் 14ஆம் திகதி தனது வாழ்வில் இரண்டு முக்கிய சந்தர்ப்பங்களை நினைவூட்டுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனது மறைந்த தந்தையின் 84ஆவது பிறந்தநாள் அன்றைய தினமாகும் எனவும், தந்தை தம்மை விட்டுப் பிரிந்ததன் பின்னரான முதலாவது பிறந்தநாள் இதுவெனவும் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். அதேவேளை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிட்டு இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தத் தேர்தலின் முடிவுகள் தான் எதிர்பார்த்தவாறு அமையாவிட்டாலும், அது தனது வாழ்வில் ஒரு முக்கிய அத்தியாயமாக அமைந்ததாகத் தெரிவித்துள்ள அவர், அதன்பின்னர் ஒரு மாத காலத்துக்குள் அனைத்து அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் தான் முற்றாக விலகியதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் வாழ்க்கையில் தனக்குக் கிடைத்த வாய்ப்புகள், தன் மீது மக்கள் வைத்த நம்பிக்கை மற்றும் பலரிடமிருந்து கிடைத்த வழிகாட்டல்களுக்கு தனது ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ள காஞ்சன விஜேசேகர, பொது வாழ்வில் தான் வழங்கிய பங்களிப்பு குறித்துத் திருப்தியடைவதாகவும், அதனைப் பெருமையுடன் திரும்பிப் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசியலில் இருந்து விலகி வர்த்தகத் துறைக்கு (Corporate Sector) மாறி 23 மாதங்கள் கடந்துள்ள நிலையில், ஆரம்பத்தில் பகுதிநேர ஈடுபாடாகத் தொடங்கிய இந்தப் பயணம் தற்போது முழுநேரப் பணியாக மாறியுள்ளதாகவும், அதனைத் தான் பெரிதும் விரும்பிச் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மாற்றம் தனது வாழ்வில் புதிய கண்ணோட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், குடும்பத்துடன் செலவிட அதிக நேரம், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பு, பயணங்கள் செய்வதற்கான சந்தர்ப்பம், தனியுரிமை மற்றும் பல்வேறு தொழில்துறைகள் குறித்துக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தாம் தேர்ந்தெடுத்துள்ள இந்தப் புதிய பாதை குறித்து முழுமையான திருப்தி அடைந்துள்ளதாகவும், அரசியலுக்கு மீண்டும் திரும்பும் எவ்வித நோக்கமோ அல்லது ஆர்வமோ தனக்குக் கிடையாது எனவும் காஞ்சன விஜேசேகர தனது அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
