Sri Lanka: தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட E/25 புதிய மாணவர்களுக்கான வரவேற்ப...
Official news report from Thayaka Tamil Editorial Desk covering Sri Lanka.

Sri Lanka News Desk: இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திற்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட E/25 மாணவர் தொகுதியினருக்கான கல்விச் செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு…
தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட E/25 புதிய மாணவர்களுக்கான வரவேற்பும் கல்விச் செயற்பாடுகளும் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்! was officially reported by Thayaka Tamil News Media Network.
இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திற்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட E/25 மாணவர் தொகுதியினருக்கான கல்விச் செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (10.11.2026) பொறியியல் பீடத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம உரையாற்றிய பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன், பொறியியல் கல்வியில் சிறந்து விளங்க விரும்பும் மாணவர்கள் தங்களது கல்விப் பயணத்தின் முதல் நாளிலிருந்தே முறையான திட்டமிடலுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 2,300 மாணவர்கள் மாத்திரமே உயர்பீடப் பொறியியல் கல்விக்காகத் தெரிவு செய்யப்படுகின்ற நிலையில், அவர்களில் ஒரு தொகுதியினராகத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை மாணவர்களுக்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பாகும் என்றும், இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி உயர்ந்த கல்வி அடைவுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
பல்கலைக்கழக வாழ்க்கையின் ஆரம்பத்தில் புதிய கற்றல் மற்றும் சமூகச் சூழலுக்கு ஏற்பத் தங்களை மாற்றியமைத்துக்கொள்வதில் மாணவர்கள் தயக்கத்தையும் பதற்றத்தையும் எதிர்கொள்வது இயல்பானது எனக் குறிப்பிட்ட உபவேந்தர், தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் மூலம் அவற்றை வெற்றிகரமாகக் கடக்க முடியும் எனத் தெரிவித்தார். மேலும், E/25 மாணவர் தொகுதியில் நாட்டின் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளடங்கியிருப்பது பல்கலைக்கழகத்தின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துவதாகவும், மாணவர்கள் பிராந்திய வேறுபாடுகளைக் கடந்து நட்புறவையும் ஒற்றுமையையும் வளர்த்துக்கொண்டு அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பொறியியல் கல்வி வாஷிங்டன் ஒப்பந்தம் (Washington Accord) மற்றும் இலங்கை பொறியியலாளர் நிறுவனம் (IESL) ஆகியவற்றின் சர்வதேசத் தரங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுவதை விளக்கமளித்த உபவேந்தர், மாணவர்கள் GPA, கிரெடிட் முறைமை மற்றும் பருவகால மதிப்பீடுகள் தொடர்பில் ஆரம்பத்திலிருந்தே தெளிவான புரிதலைப் பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மாணவர்கள் தங்களது கல்விசார் சந்தேகங்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் எவ்விதத் தயக்கமுமின்றி விரிவுரையாளர்களையும் பீடாதிபதியையும் அணுக முடியும் எனவும், பொறியியல் பீடத்தில் எப்போதும் ‘திறந்த கதவுக் கொள்கை’ (Open Door Policy) நடைமுறையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பல்கலைக்கழகக் கல்வி என்பது பட்டம் பெறுவதற்கான பயணம் மாத்திரமல்ல; அறிவு, ஆளுமை, தலைமைத்துவம், சமூகப் பொறுப்பு மற்றும் தொழில்முறைத் திறன்களை வளர்த்துக்கொள்ளும் காலகட்டமாகும். எனவே, மாணவர்கள் கல்விச் செயற்பாடுகளுடன் இணைப்பாடவிதான நடவடிக்கைகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு, எதிர்காலத்தில் திறமையான பொறியியலாளர்களாகவும் பொறுப்புள்ள சமூகப் பிரஜைகளாகவும் உருவாக வேண்டுமென உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
