அரசு ஊழியர்களுக்கு வாரந்தோறும் புதன்கிழமை விடுமுறை! பாடசாலைகள், நீதிமன்றங்களும் மூடல் – எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை!

இலங்கையில் தற்போது தீவிரமடைந்துள்ள எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனைச் சமாளிக்கும் வகையில் அரச ஊழியர்களுக்கு நாளை புதன்கிழமை (மார்ச் 17) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். (தொடர்ந்து வாசிக்க…)

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் மற்றும் விநியோகத் தடைகளை நிர்வகிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கு மேலதிகமாக, அனைத்து அரச பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கும் புதன்கிழமைகள் விடுமுறை தினமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் ஏனைய நான்கு வேலை நாட்களிலும், சேவைகளைப் பாதிக்காத வகையில் எத்தனை பணியாளர்களை பணிக்கு அழைக்க வேண்டும் என்பதை அந்தந்த நிறுவனப் பிரதானிகளே தீர்மானிக்கலாம் என அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த விடுமுறையானது சுகாதாரம், துறைமுகங்கள், நீர்வழங்கல், மின்சாரம் மற்றும் சுங்கத் திணைக்களம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்குப் பொருந்தாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன், செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து அரச விழாக்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், தனியார் நிறுவனங்களும் சாத்தியமான இடங்களில் இதே விடுமுறை நடைமுறையைப் பின்பற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “தற்போதுள்ள கையிருப்பைக் கொண்டு நாட்டின் அத்தியாவசியத் தேவைகளை நீண்ட நாட்களுக்குக் கொண்டு செல்லவே இந்தத் தற்காலிக ஏற்பாடு” என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Advertisement