மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலை முன்னிறுத்தி நாட்டில் எரிபொருள் அல்லது சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என எதிர்க்கட்சிகள் பரப்பி வரும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என வர்த்தகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (03) உரையாற்றிய அவர், குறுகிய அரசியல் லாபத்திற்காக மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். 2026 ஆம் ஆண்டிற்காக மொத்தம் 3 இலட்சத்து 80 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுள்ள நிலையில், இந்த மார்ச் மாதத்தில் மட்டும் 10 கப்பல்கள் ஊடாக 38,000 மெற்றிக் தொன் எரிவாயு விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் உறுதியளித்தார். கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் முறையே 24,000 மற்றும் 28,000 மெற்றிக் தொன் எரிவாயு கொள்வனவு செய்யப்பட்டு விநியோகம் சீராக முன்னெடுக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, தனியார் நிறுவனமான ‘லாப்’ (Laugfs) தனது நுகர்வோருக்குத் தடையின்றி எரிவாயுவை விநியோகிக்கத் தவறினால், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக மஞ்சள் நிற சிலிண்டர்களை நீல நிற (லிட்ரோ) சிலிண்டர்களாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். லாப் நிறுவனம் தட்டுப்பாடின்றி விநியோகிக்க ஏதுவாக, அரச நிறுவனத்தின் ஊடாக 10,000 மெற்றிக் தொன் எரிவாயுவை கொள்வனவு செய்ய தற்காலிக வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவேளை அந்த நிறுவனம் விநியோகத்தில் சுணக்கம் காட்டினால் லிட்ரோ நிறுவனத்தின் ஊடாக சந்தை தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். எனவே, பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றித் தமக்குத் தேவையான எரிவாயுவை வழக்கம் போல் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் வசந்த சமரசிங்க திட்டவட்டமாகத் தெரிவித்தார்.