மத்திய கிழக்கில் நிலவும் மிகக்கடுமையான போர்ச் சூழல் காரணமாக வான்பரப்புகள் அவசரமாக மூடப்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கான விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் இன்று வரை மத்திய கிழக்கு நாடுகளுக்கான சுமார் 288 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் தமிந்த ரம்புக்வெல்லா அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார். இருப்பினும், பயணிகளின் அவசரத் தேவையைக் கருதி ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா, மஸ்கட் மற்றும் சயீத் ஆகிய நகரங்களுக்கு இன்று 6 விமானங்கள் மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நெருக்கடியால் விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால் லண்டன் செல்ல முடியாமல் தவித்து வரும் பயணிகளுக்காக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் எதிர்வரும் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஒரு கூடுதல் விமானத்தை இயக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, UL1205 என்ற சிறப்பு விமானம் காலை 06:50 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்டு லண்டன் சென்றடையும். அதேபோல், லண்டனிலிருந்து கொழும்பு திரும்பும் UL1206 விமானம் மறுநாள் காலை இலங்கையை வந்தடையும். வான்பரப்பில் நிலவும் பதற்றத்தைத் தொடர்ந்து கண்காணித்து வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், தேவைப்பட்டால் மேலும் சில வழித்தடங்களில் கூடுதல் விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில், உலகப் புகழ்பெற்ற எமிரேட்ஸ் (Emirates) நிறுவனம் மறு அறிவிப்பு வரும் வரை மிகக் குறைந்த அளவிலான விமானங்களை மட்டுமே இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. வான்பரப்புகள் பகுதியளவு திறக்கப்பட்ட பின்னரே வணிக ரீதியிலான விமானங்கள் முழுமையாகச் செயல்படும் என்றும், பயணிகளின் பாதுகாப்பிற்கே முதலிடம் என்றும் அந்நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதனிடையே, வுஹானில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் மார்ச் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ள போதிலும், வான்வெளிப் பாதுகாப்பைப் பொறுத்தே இறுதி முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.