மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய ‘ஐரிஸ் தேனா’; அமெரிக்க நீர்மூழ்கியில் ஆஸ்திரேலியப் படையினர் இருந்தது அம்பலம்!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானுக்கு எதிராகத் தொடங்கியுள்ள அதிரடி இராணுவ நடவடிக்கைகள், தற்போது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒரு பெரும் போராக உருவெடுத்துள்ளது. இலங்கையின் தெற்கு கடற்பரப்பிலிருந்து 40 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானியக் கடற்படையின் நவீன போர்க்கப்பலான ‘IRIS Dena’, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஏவப்பட்ட ‘Mk-48’ டொர்பிடோ தாக்குதலில் கடந்த மார்ச் 4 அன்று அதிகாலை வெடித்துச் சிதறியது. இந்தத் தாக்குதல் தொடர்பாக இன்று வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவலின்படி, தாக்குதல் நடத்திய அந்த அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் மூன்று ஆஸ்திரேலியப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் இருந்ததை ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவுடனான AUKUS பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அந்த ஆஸ்திரேலிய அதிகாரிகள் நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவித்த பிரதமர் அல்பானீஸ், அவர்கள் ஈரானுக்கு எதிரான நேரடித் தாக்குதலில் பங்கேற்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும், ஈரானியக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தில் ஆஸ்திரேலியப் பிரஜைகளின் இருப்பு சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 87 ஈரானிய மாலுமிகள் உயிரிழந்துள்ள நிலையில், இலங்கைக் கடற்படை மேற்கொண்ட துரித மனிதாபிமான மீட்பு நடவடிக்கையின் மூலம் 32 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் தற்போது பலத்த பாதுகாப்புடன் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மத்திய கிழக்கைத் தாண்டி இந்தியப் பெருங்கடல் வரை போர் விரிவடைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த அதிரடி நகர்வு சர்வதேச கடல்சார் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. அதேவேளையில், அமெரிக்காவின் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியிலும், ஆபத்தில் சிக்கிய ஈரானிய மாலுமிகளைக் காப்பாற்றி மனிதாபிமானத்தை நிலைநாட்டிய இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முடிவு சர்வதேச இராஜதந்திர மேடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள இந்தப் போர் பதற்றம், பிராந்திய நாடுகள் தங்களின் பாதுகாப்பு நிலைகளை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளியுள்ளது.

Advertisement

Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Advertisement