கிழக்கு மாகாணத்தில் அண்மைய நாட்களாகப் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பதிவான “பாழ்ங்கிணறு படுகொலைச் சம்பவங்கள்” மற்றும் நகைப்பறிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண பெருங்குற்றவியல் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் பல முக்கிய விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். (தொடர்ந்து வாசிக்க…)
பெண்களின் பயணப் பாதுகாப்பு மற்றும் தற்போதைய நெருக்கடி கால நடைமுறைகள் குறித்த பொலிஸாரின் விசேட அறிவுறுத்தல்கள் வருமாறு:
பெண்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது அதிகப் பெறுமதியுள்ள தங்க ஆபரணங்களை வெளிப்படையாக அணிவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், முன்பின் தெரியாத முச்சக்கர வண்டிகள் (Auto) அல்லது அறிமுகமில்லாத வாகனங்களில் ஏறுவதைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும் என்றும், முடிந்தவரை நம்பிக்கையான அல்லது தெரிந்த வாகனங்களைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண்கள் தனித்துப் பயணிப்பதைத் தவிர்த்து, குழுவாகவோ அல்லது உறவினர்களுடனோ பயணங்களை மேற்கொள்வதுடன், உங்களது பயண விபரங்களை முன்கூட்டியே நெருங்கிய உறவினர்களிடம் பகிர்ந்து கொள்வது பாதுகாப்பானது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்நியர்கள் வழங்கும் உணவுப் பொருட்கள் அல்லது பானங்களை எக்காரணம் கொண்டும் உட்கொள்ள வேண்டாம் என எச்சரித்துள்ள பொலிஸ் பொறுப்பதிகாரி, மயக்கமருந்து கொடுத்து நகைகளைப் பறிக்கும் கும்பல்கள் குறித்து அதிக அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுள்ளார். ஏதேனும் ஆபத்தான அல்லது சந்தேகத்திற்கிடமான சூழல் ஏற்பட்டால், உடனடியாக 119 எனும் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதாரச் சூழலைக் கருத்திற்கொண்டு, தனிப்பட்ட வாகனங்களைத் தவிர்த்துப் பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்துமாறும், ஒரே பயணத்தில் பல வேலைகளைத் திட்டமிட்டு முடிப்பதன் மூலம் தேவையற்ற அலைச்சல்களைக் குறைக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், கல்வி மற்றும் அலுவலகப் பணிகளை முடிந்தவரை இணையதளம் (Online) வாயிலாக மேற்கொள்ளவும், குறுகிய தூரங்களுக்கு நடைபயணம் அல்லது மிதிவண்டிகளைப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் எரிபொருள் வளத்தைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸ் பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் கோரிக்கை விடுத்துள்ளார்.