தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியான நடிகர் விஜய், தனது திரைப்பயணத்தின் 69-வது படமாக நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதில் அடுத்தடுத்து முட்டுக்கட்டைகள் ஏற்பட்டு வருகின்றன. எச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவான இத்திரைப்படம், கடந்த பொங்கல் திருநாளிலேயே திரைக்கு வந்திருக்க வேண்டியது. மலேசியாவில் படு பிரம்மாண்டமாக நடந்த இசை வெளியீட்டு விழாவிற்குப் பிறகு, படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், சென்சார் சான்றிதழ் பெறுவதில் நிலவும் இழுபறியால் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. (தொடர்ந்து வாசிக்க…)
படத்தின் அரசியல் ரீதியான வசனங்கள் மற்றும் காட்சிகள் காரணமாக, தணிக்கைத் துறை ஏற்கனவே சில தடைகளை விதித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, படத்தின் ரிலீஸை உறுதி செய்ய இன்று ‘ரிவைசிங் கமிட்டி’ (Revising Committee) ஜனநாயகன் படத்தைப் பார்த்து இறுதி முடிவெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இன்று ஸ்க்ரீனிங் முடிந்ததும் ரிலீஸ் தேதி வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், கமிட்டி உறுப்பினர்களில் ஒருவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் இன்றைய ஸ்க்ரீனிங் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திடீர் மாற்றத்தால் படம் அடுத்த கட்டத்திற்குச் செல்வதில் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. மறுபடியும் எப்போது ரிவைசிங் கமிட்டி கூடும்? படம் எப்போது திரைக்கு வரும்? என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. தளபதி விஜய்யின் கடைசிப் படம் என்பதால், ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தள்ளிப்போவது ரசிகர்களிடையே மிகுந்த கவலையையும், சமூக வலைதளங்களில் விவாதங்களையும் கிளப்பியுள்ளது. சென்சார் பிரச்சனைகளைக் கடந்து ‘ஜனநாயகன்’ எப்போது திரையரங்குகளில் கர்ஜிக்கும் என்பதே இப்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.