மீட்புப் பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் மீது சரமாரித் துப்பாக்கிச் சூடு; காயமடைந்த நிலையிலும் தப்பிய ஆயுத அதிகாரி!
ஈரான் வான்பரப்பில் கடந்த வார இறுதியில் அமெரிக்காவின் F-15E Strike Eagle போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில், ஒரு அதிகாரி உட்பட மொத்தம் மூன்று அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்பு நடவடிக்கையின் போது ஈரானியப் படைகள் மற்றும் ஆயுதமேந்திய குழுக்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களே இந்த பாதிப்புகளுக்குக் காரணம் என அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானத்தின் ஆயுத அமைப்பு அதிகாரி (Weapon Systems Officer) மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு பணியாளர்கள் என மொத்தம் மூவர் இதில் காயமடைந்துள்ளனர்.
விமானியை மீட்கச் சென்ற HH-60 Jolly Green II ரக ஹெலிகாப்டர்கள் மீது, ஈரானில் இருந்த சிறிய ரக ஆயுதங்களைக் கொண்டிருந்த ஒவ்வொருவராலும் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் பின்தொடர்ந்து சென்ற ஒரு ஹெலிகாப்டர் பலத்த தாக்குதலுக்கு உள்ளானதாக அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் டான் கேன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், குறித்த ஆயுத அதிகாரி உடலில் இருந்து அதிக இரத்தம் வெளியேறிய நிலையிலும், மலைப்பகுதிகளில் ஏறிச் சென்று தனது இருப்பிடத்தைப் பாதுகாப்பாகத் தொடர்புகொண்டு தெரிவித்ததாக டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது படுகாயமடைந்த வீரர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ள போதிலும், இந்தப் போர்ச் சூழல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாரிய நேரடி மோதலுக்கான அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.