மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் ‘Operation Epic Fury’ தாக்குதலால் பெரும் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஈரானின் மிக உயரிய அதிகார மையமான ‘உச்சத் தலைவர்’ (Supreme Leader) பதவிக்கு மொஜ்தபா கமெனி (Mojtaba Khamenei) அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமெனியின் மகனான இவர், ஈரானின் 88 உறுப்பினர்களைக் கொண்ட ‘நிபுணர்கள் அவை’ மூலம் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பல ஆண்டுகளாகத் திரைமறைவு அதிகார மையமாகப் பேசப்பட்டு வந்த மொஜ்தபா, இப்போது ஈரானின் சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. (தொடர்ந்து வாசிக்க…)
ஈரானின் இந்த அதிரடி மாற்றத்தைத் தொடர்ந்து, அந்நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவ அமைப்பான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), புதிய தலைவருக்குத் தனது வாழ்நாள் விசுவாசத்தை அறிவித்துள்ளது. “புரட்சி மற்றும் இஸ்லாமியக் கட்டமைப்பு என்பது தனிநபர்களை மட்டும் சார்ந்தது அல்ல; இது ஒரு தொடர்ச்சியான பயணம் என்பதை இந்த நியமனம் உலகிற்கு நிரூபித்துள்ளது. எமது புதிய தலைவரின் ஒவ்வொரு உத்தரவையும் கேட்டு, அதனை நிறைவேற்றக் காவல்படை எப்போதும் தயாராக இருக்கும்” என IRGC தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் சூளுரைத்துள்ளது. இதன் மூலம், ஈரானின் இராணுவ பலம் புதிய தலைவரின் கீழ் மேலும் ஒருமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த நியமனத்திற்குத் தனது பாணியில் கடும் கண்டனத்தையும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். ஈரானின் புதிய தலைமை குறித்துச் சாடியுள்ள டிரம்ப், “அமெரிக்காவின் அங்கீகாரம் இல்லாத எந்தவொரு தலைவரும் அங்கு நீண்ட காலம் நீடிக்க முடியாது” என எச்சரித்துள்ளார். ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு இருக்கும் என்பதையே டிரம்பின் இந்த வார்த்தைகள் உணர்த்துகின்றன. புதிய தலைவரின் நியமனம் ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டு வருமா அல்லது மீண்டும் ஒரு பெரும் போருக்கு வித்திடுமா என்பது இராஜதந்திர வட்டாரங்களில் தற்போதைய பெரும் விவாதமாக மாறியுள்ளது.