இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் எரிபொருள் விலைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இலக்கு வைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கிண்டலான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “இலங்கையிலேயே எண்ணெய்க் கிணறுகள் இருப்பதாக ஜனாதிபதி முன்னர் நினைத்திருக்கலாம், இப்போது அப்படி எதுவும் இல்லை என்று தெரிந்த பிறகுதான் அவர் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளார் போலிருக்கிறது” என அவர் வேடிக்கையாகச் சாடியுள்ளார். நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தாக்குதலைத் தொடுத்தார். (தொடர்ந்து வாசிக்க…)
கடந்த காலங்களில் வீதிக்கு இறங்கிப் போராடிய ஜே.வி.பி (JVP) தரப்பினருக்கு, தற்போதுதான் ‘உலகச் சந்தை’ என்ற ஒன்று இருப்பதே புரிந்திருக்கும் எனத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, அரசாங்கத்தின் விலை உயர்வு தர்க்கத்தை முற்றாக மறுத்தார். “உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்ந்ததால் இங்கும் உயர்த்தினோம் என்று அரசு கூறுகிறது. ஆனால், உலகச் சந்தையில் விலை தற்போது குறைந்துள்ள நிலையிலும், இலங்கையில் மட்டும் ஏன் விலையைக் குறைக்கவில்லை?” என அவர் கேள்வி எழுப்பினார். நிலக்கரி கொள்வனவில் ஏற்பட்ட பாரிய நஷ்டத்தை மக்கள் தலையில் சுமத்தவே இந்த எரிபொருள் விலை உயர்வு ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவதாக அவர் மீண்டும் ஒருமுறை குற்றம் சாட்டினார்.
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் உலகம் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வரும் வேளையில், தற்போதைய அரசாங்கம் எவ்வித முறையான திட்டமுமின்றி கடந்த கால ஆட்சியாளர்களைக் குறை சொல்வதிலேயே காலத்தைக் கடத்துவதாக அவர் விமர்சித்தார். “78 ஆண்டுகால ஆட்சியை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, தற்போதைய நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கக்கூடிய வேலைத்திட்டங்களை அரசு முன்வைக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார். எரிபொருள் விலையேற்றம் மற்றும் ஜனாதிபதியின் ‘இரண்டு மாத கால’ எச்சரிக்கைக்குப் பிறகு நாமல் ராஜபக்ஷவின் இந்தக் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.