மத்திய கிழக்கு போர்ச் சூழலைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்டுள்ள திடீர் எரிபொருள் விலை உயர்வு, அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. “நாட்டில் 45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், எதற்கும் அஞ்சத் தேவையில்லை என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் வாக்குறுதி அளித்திருந்தார். அப்படியிருக்கையில், திடீரென ஒரு நள்ளிரவில் ஏன் விலைகள் உயர்த்தப்பட்டன?” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், இந்த விலை அதிகரிப்புக்கு பின்னால் பாரிய ‘மோசடி மறைப்பு’ இருப்பதாகக் குற்றம் சாட்டினார். (தொடர்ந்து வாசிக்க…)
நாமல் ராஜபக்ஷ தனது உரையில், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை மிகக் கடுமையாகச் சாடினார். “உலகச் சந்தையில் விலை உயர்ந்ததால் இங்கே உயர்த்தினோம் என்கிறார்கள். ஆனால், இங்கே விலை உயர்த்தப்பட்டு 24 மணிநேரம் கூட ஆகவில்லை, அதற்குள் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியுள்ளது. உண்மையில், நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மோசடியினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யவே, அரசாங்கம் அப்பாவி மக்கள் மீது இந்த எரிபொருள் சுமையை ஏற்றியுள்ளது” என அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கத்திடம் முறையான குறுகிய கால அல்லது நீண்ட காலத் திட்டங்கள் எதுவுமே இல்லை என்றும், இது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டார். “45 நாட்களுக்குத் தேவையான இருப்பு இருந்தால், அவசரமாக விலையை உயர்த்த வேண்டிய அவசியம் என்ன? அரசாங்கம் அனைத்துத் தரப்பினருடனும் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக எடுக்கும் இத்தகைய முடிவுகள் நாட்டை மீண்டும் ஒரு பொருளாதாரப் படுகுழிக்குள் தள்ளும்” என அவர் எச்சரித்தார். எரிபொருள் விலையேற்றத்தால் போக்குவரத்து முதல் அத்தியாவசியப் பொருட்கள் வரை அனைத்தும் உயர்ந்து வரும் வேளையில், நாமலின் இந்தக் கருத்துக்கள் ஆளும் தரப்பிற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.