நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை நிர்வகிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள QR குறியீடு முறைமையின் வாராந்த ஒதுக்கீடு, ஒவ்வொரு சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்து ஞாயிற்றுக்கிழமை மீண்டும் புதுப்பிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார். QR முறைமையின் ஊடாக நாட்டின் எரிபொருள் நுகர்வை 20 சதவீதத்தால் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். (தொடர்ந்து வாசியுங்கள்…)
தற்போது நாட்டின் தினசரி டீசல் நுகர்வு 4,800 மெட்ரிக் தொன்களாகவும், பெற்றோல் நுகர்வு 4,045 மெட்ரிக் தொன்களாகவும் உள்ள நிலையில், வரிசைகளைக் கட்டுப்படுத்தவே இந்த அவசர ஒதுக்கீட்டு முறை கொண்டுவரப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திற்காக ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட எரிபொருள் கப்பல்கள் மூலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) இறுதி வாரம் வரை மட்டுமே விநியோகத்தை முன்னெடுக்க முடியும் எனத் தலைவர் ராஜகருண எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக மசகு எண்ணெய் (Crude Oil) இறக்குமதி செய்வதில் பாரிய சிக்கல்கள் நீடிக்கின்றன. “மசகு எண்ணெய் தொடர்பில் நாம் எடுத்த தீர்மானங்களைப் போர்ச் சூழலுக்கு ஏற்ப மாற்ற வேண்டியுள்ளது. உலகமே ஒரு பாரிய எரிசக்தி நெருக்கடிக்குத் தயாராகி வரும் நிலையில், தற்போதுள்ள கையிருப்பைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். இப்போது சில அர்ப்பணிப்புகளைச் செய்து இருப்புகளைப் பாதுகாத்தால் மட்டுமே வரவிருக்கும் பேராபத்திலிருந்து நாம் தப்பிக்க முடியும்” என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.