மட்டக்களப்பின் ஆன்மீக வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, சின்ன ஊறணி கிராம சுவிசேஷ திருச்சபையின் 30-வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘மாபெரும் நற்செய்தி இன்னிசை விழா’ கடந்த மூன்று தினங்களாகப் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் மிக விமர்சையாக நடைபெற்றது. சின்ன ஊறணி காந்தி ஸ்டார் விளையாட்டு மைதானமே விழாக்கோலம் பூண்டிருந்த நிலையில், திருச்சபையின் மூத்த போதகர் கணபதிப்பிள்ளை தேவேந்திரன் அவர்களின் தலைமையில் இம்மாதம் 06, 07 மற்றும் 08 ஆகிய திகதிகளில் இந்த எழுச்சிமிகு நிகழ்வுகள் அரங்கேறின. மட்டக்களப்பின் மூலைமுடுக்குகளில் இருந்தெல்லாம் வருகை தந்த மக்கள், அமைதி மற்றும் விசுவாசத்தின் செய்தியைத் தாங்கி நின்ற இவ்விழாவில் மெய்சிலிர்த்துப் போயினர். (தொடர்ந்து வாசிக்க…)

இந்த முப்பெரும் விழாவின் போது, மனதை வருடும் நற்செய்தி இன்னிசைப் பாடல்கள் ஒருபுறம் ஒலிக்க, மறுபுறம் நோயாளிகளுக்காகவும், தேசத்தின் அமைதிக்காகவும் விசேட வல்லமைப் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன. வெறும் ஆன்மீக நிகழ்வாக மட்டுமன்றி, தமிழர்களின் பாரம்பரிய கிராமிய கலை கலாசார நிகழ்வுகளும் மேடையில் அரங்கேற்றப்பட்டது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. திருச்சபையின் முப்பது ஆண்டுகால நீண்ட பயணத்தில் தங்களை அர்ப்பணித்த முன்னோடிகள் மற்றும் சமூகப் பணியாளர்களைக் கௌரவிக்கும் ‘விருது வழங்கும் படலம்’ விழாவிற்கு ஒரு உணர்ச்சிப்பூர்வமான பரிமாணத்தை வழங்கியது. மட்டக்களப்பின் ஆன்மீகப் பலமும், சமூக ஒருமைப்பாடும் இந்த மேடையில் ஒருசேரப் பிரதிபலித்தன.

நிகழ்வின் இறுதி நாளான (08) அன்று, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். அவருக்குத் திருச்சபையினரால் கலாசார முறைப்படி பூரண கும்ப மரியாதை அளித்துச் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. விழாவில் உரையாற்றிய வைத்தியர் சிறிநாத், “சமூகத்தில் நிலவும் வேற்றுமைகளைக் களைந்து, அன்பின் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆன்மீக நிறுவனங்களின் பங்கு இன்றியமையாதது” எனத் தனது உரையில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இரவு வரை நீடித்த இந்த இசை மழையில் நனைந்த மக்கள், ஒரு புதிய நம்பிக்கையுடனும் புத்துணர்ச்சியுடனும் தத்தமது இல்லங்களுக்குத் திரும்பினர்.
