மட்டக்களப்பு, அக்டோபர் 17, 2025
மட்டக்களப்பு பிராந்தியத்தின் சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன், புதிதாக நியமிக்கப்பட்ட 32 தாதிய உத்தியோகத்தர்கள் நேற்றைய தினம் (16.10.2025) வியாழக்கிழமை பணியில் இணைந்துள்ளனர். இவர்களுக்கான சேவை நிலையம் குறிப்பிடப்பட்ட நியமனக் கடிதங்களை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் அவர்கள் வழங்கி வைத்தார்.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிராந்தியத்தின் பொறுப்பு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
பிராந்திய திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எஸ். தனுஷியா அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இவ் நிகழ்வில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்கள் புதிய தாதிய உத்தியோகத்தர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் சுகாதார சேவைகள் பற்றிய விரிவான அறிமுகத்தை வழங்கினார். அத்துடன், பிராந்திய பொறுப்பு வைத்திய அதிகாரிகள் தங்களது துறை சார்ந்த விளக்கங்களை அளித்து, புதிய தாதிய உத்தியோகத்தர்களுக்கான பணிகளுக்கு வழிகாட்டுதல்களையும் வழங்கினர்.
இதற்கமைய, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு 20 உத்தியோகத்தர்களும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு 08 உத்தியோகத்தர்களும், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு 02 உத்தியோகத்தர்களும் மற்றும் கதிரவெளி பிரதேச வைத்தியசாலைக்கு 02 உத்தியோகத்தர்களும் இணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய நியமனங்கள் பிராந்தியத்தின் வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#மட்டக்களப்பு#தாதியர்நியமனம்#சுகாதாரசேவை#வைத்தியசாலை#Batticaloa#HealthService#NewNurses#SriLanka





