“9 ஆண்டுகளாக மக்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது!” – தேர்தலை நடத்துமாறு கரு ஜயசூரிய அழுத்தம்; ஜனாதிபதியின் வாக்குறுதியை நினைவூட்டல்!

இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாமல் கடந்த 9 ஆண்டுகளாக மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டு வருவது அநீதியானது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கவலை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் தமக்கான ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள நீண்டகாலமாக எதிர்பார்த்துள்ள நிலையில், அந்த உரிமையை வழங்குவது அரசாங்கத்தின் தார்மீகக் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். (தொடர்ந்து வாசிக்க…)

இது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், மாகாண சபைகள் இயங்காத காரணத்தால் நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளதோடு, அடிமட்ட அளவிலான அபிவிருத்திப் பணிகள் முடங்கியுள்ளதாகத் தெரிவித்தார். “நான் அண்மையில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசினேன். அவர்கள் அனைவரும் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளனர். எனவே, அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து இதற்கான பொறிமுறையை உருவாக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

மேலும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனக்கு வழங்கிய உறுதிமொழியையும் கரு ஜயசூரிய நினைவூட்டினார். “தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதியைச் சந்தித்த போது, அவர் இந்த முறைமையை நிச்சயமாக ஒழிப்பதாகக் கூறினார். அதன் மூலம் நாட்டில் ஒரு புதிய அரசியல் கலாசாரம் உருவாகும்” என அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஏற்கனவே மனோ கணேசன் உள்ளிட்ட தலைவர்கள் மாகாண சபைத் தேர்தல் குறித்து ஜனாதிபதியை விமர்சித்து வரும் நிலையில், கரு ஜயசூரியவின் இந்த கருத்துக்கள் அரசியல் அரங்கில் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

Advertisement

Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Advertisement