மாணிக்கவாசகர் சுவாமிகளின் குருபூசை தினமான ஆனி மகம் நன்னாளை முன்னிட்டு, கொம்மாதுறை விபுலானந்தா அறநெறிப்பாடசாலை மாணவர்களின் ஏற்பாட்டில் குருபூசை மற்றும் திருவாசக முற்றோதல் நிகழ்வுகள் இன்று மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றன.

இந்தத் தெய்வீக நிகழ்வின் மிக முக்கிய அம்சமாக, மாணிக்கவாசகர் சுவாமிகளின் திருவுருவப் படம் மாணவர்களால் பக்தி சிரத்தையுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து விசேட வழிபாடுகள் மற்றும் திருவாசகம் முற்றோதல் நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன.

இம்மாணவர்களின் ஆன்மீகப் பணியினை மேலும் ஊக்குவிக்கும் வகையிலும், நிகழ்வின் சிறப்பை மெருகேற்றும் வகையிலும், ‘கித்துள் சடச்சுவாமி ஆச்சிரமம்’ இந்நிகழ்வுக்கான முழுமையான அனுசரணையை வழங்கி முன்னின்று நடத்தியிருந்தது.

மாணவர்களின் ஏற்பாட்டிலும், ஆச்சிரமத்தின் வழிகாட்டலிலும் நடைபெற்ற இந்த குருபூசை நிகழ்வு, அப்பகுதி ஆன்மீக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மாணிக்கவாசகர் சுவாமிகளின் அருளாசியைப் வேண்டிப் பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்வு, அறநெறிக்கல்வியின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைப்பதாக அமைந்தது.