மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அங்குள்ள இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (04) அவசரக் கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போது நிலவும் போர்ச் சூழலால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எந்தவொரு இலங்கையருக்கும் இதுவரை பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்திய ஜனாதிபதி, அங்கிருந்து உதவிகளை நாடுவோருக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க அந்தந்த நாட்டுத் தூதரகங்களுக்குத் தேவையான நிதி ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் அவசரத் தேவைகளைத் தீர்ப்பதற்காக 24 மணிநேர அவசர சேவை மையங்கள் தூதரகங்கள் ஊடாகச் செயற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த இக்கட்டான சூழலில், இலங்கையில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ 1912 என்ற அவசர இலக்கத்தையும், வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்களின் பிரச்சினைகளை முன்வைக்க 1989 என்ற அவசர அழைப்பு இலக்கத்தையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. சுற்றுலா அல்லது வர்த்தக நோக்கில் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று, விமான சேவைகள் பாதிப்பால் நாடு திரும்ப முடியாமல் தங்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் அழைத்து வரத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். தற்போது விமான சேவைகள் படிப்படியாக வழமைக்குத் திரும்பி வருவதால், எவ்வித தடையுமின்றி இலங்கையர்களை அழைத்து வர முடியும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
அத்துடன், விடுமுறைக்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்புவதில் சிக்கல் இருந்தால், அவர்களுக்குத் தேவையான கால அவகாசத்தைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து பெற்றுத் தருமாறு தூதரகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை விசேட மீட்பு விமானங்களுக்கான கோரிக்கைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றாலும், எந்தவொரு அவசர நிலைமையையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள் பலரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றுப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீளாய்வு செய்தனர்.
