மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு 11,938 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு! – 2177 திட்டங்களை நடைமுறைப்படுத்த அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி உத்தரவு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான அபிவிருத்திப் பணிகளுக்காக 2177 திட்டங்களுக்கு 11,938 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களது ஏற்பாட்டில், பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. (தொடர்ந்து வாசிக்க…)

இந்தக் கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய நிதி ஒதுக்கீடுகள் மற்றும் திட்ட விபரங்கள் வருமாறு:

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஞானமுத்து ஸ்ரீநேசன், இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் இளையதம்பி சிறிநாத் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது மாவட்ட செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் 686 திட்டங்களுக்காக 2072 மில்லியன் ரூபாவும், ஏனைய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களினால் முன்னெடுக்கப்படும் 674 திட்டங்களுக்காக 3626 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், மாகாண சபையினூடாக 755 திட்டங்களுக்கு 2908 மில்லியன் ரூபாவும், வெளிநாட்டு நிதி உதவித் திட்டங்களின் கீழ் 62 திட்டங்களுக்கு 3330 மில்லியன் ரூபாவும் செலவிடப்படவுள்ளன.

Advertisement

விவசாயம், நீர்ப்பாசனம், சுகாதாரம், வீதி மற்றும் பாலங்கள் அமைத்தல் போன்ற அடிப்படைத் தேவைகளுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் நீண்டகாலப் பிரச்சினைகளான யானை வேலி அமைத்தல், மேய்ச்சல்தரைப் பிரச்சினை, காணி பிணக்குகள் மற்றும் குடிநீர் வழங்கல் போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, யானை-மனித மோதலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் சிறு குளங்களைப் புனரமைப்பதற்கான முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதுடன், அரச திணைக்களங்களில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ. நவநீதன், முப்படை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், திட்டங்களை எவ்வித தாமதமுமின்றித் துரிதமாக முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாவட்டத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இந்த நிதி ஒதுக்கீடுகள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Advertisement