மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் சி. சிவானந்தம் அவர்களின் வீடு (18) இரவு 11:00 மணியளவில் சனிக்கிழமை இரவு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தை ஏறாவூர்பற்று பிரதேச சபை தவிசாளர் மு.முரளிதரன் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் நாகேந்திரன் ஆகியோர் சேதங்களை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் பிரதேச சபை உறுப்பினர் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவத்தில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன், வீட்டின் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் முழுமையாக எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் வீட்டு உபயோகப் பொருட்கள், கதவுகள், ஜன்னல்கள் மற்றும் கூரையின் சில பகுதிகளும் சேதமடைந்துள்ளன.
இச் சம்பவம் நடந்தபோது வீட்டில் யாரும் இருக்கவில்லை என்றும், சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக வீட்டின் உரிமையாளரான பிரதேச சபை உறுப்பினர் சி.சிவானந்தன் அவர்கள் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன் குறித்த சம்பவம் விபத்தினால் நடக்கவில்லை எனவும் மாறாக திட்டமிடப்பட்டு தீ வைக்கப்பட்ட செயல் எனவும் குறித்த பிரதேச சபை உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




