ஈரானின் முக்கிய இயற்கை எரிவாயு களமானது சவுத் பார்ஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்காவிற்கு முன்கூட்டியே எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் தனது அண்டை நாடான கத்தார் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், உலகச் சந்தையில் எண்ணெய் விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன. சவுத் பார்ஸ் எரிவாயு களம் மீதான தாக்குதலில் அமெரிக்காவிற்குப் பங்கு இல்லை எனத் தெரிவித்துள்ள டிரம்ப், ஒருவேளை ஈரான் மீண்டும் கத்தாரைத் தாக்கினால் ஈரானின் முழு எரிவாயு களத்தையும் மிகப்பெரிய அளவில் அழித்துவிடுவோம் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். (தொடர்ந்து வாசிக்க…)
இந்தக் குறிப்பிட்ட தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு எந்தத் தகவலும் இல்லை என்றும் கத்தார் எந்த வகையிலும் இதில் ஈடுபடவில்லை என்பதுடன் இது நடைபெறப் போவதை அவர்கள் அறிந்திருக்கவும் இல்லை என்று டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய எரிவாயு களத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்துக்கள், பெப்ரவரி 28 முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தொடங்கிய போரில் இரு நாடுகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பில் குறைபாடு ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது.
இஸ்ரேல் சவுத் பார்ஸ் களத்தின் சிறிய பகுதியை மட்டுமே தாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள டிரம்ப், ஈரான் மீண்டும் கத்தாரைத் தாக்காத வரை அந்த எரிவாயு களம் மீண்டும் இலக்காகாது எனவும் தெரிவித்தார். இருப்பினும் ஈரான் மீண்டும் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டால் முன்னெப்போதும் இல்லாத அளவிலான சக்தியால் அந்த முழு எரிவாயு களத்தையும் தரைமட்டமாக்கிவிடுவோம் என அவர் மீண்டும் எச்சரித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் இந்த மோதல் போக்கு உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.