ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் திட்டமிட்ட கால அட்டவணையை விட மிக வேகமாக முன்னேறி வருவதாகவும், போர் “கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது” (Very complete, pretty much) என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். CBS News செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பிரத்யேகப் பேட்டியில், ஈரானின் இராணுவக் கட்டமைப்பு முற்றாகச் சிதைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போரின் இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. (தொடர்ந்து வாசிக்க…)

அதிபர் ட்ரம்ப் தனது பேட்டியில், ஈரானிய இராணுவத்தின் தற்போதைய பலவீனத்தைப் பட்டியலிட்டுள்ளார். “ஈரானிடம் தற்போது கடற்படை இல்லை, விமானப்படை இல்லை, அவர்களின் தகவல் தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. அவர்களின் ஏவுகணைத் தளங்கள் சிதறடிக்கப்பட்டுள்ளன, ஆளில்லா வானூர்தி (Drone) உற்பத்தி நிலையங்கள் தகர்க்கப்பட்டுள்ளன. இராணுவ ரீதியாகப் பார்த்தால் ஈரானிடம் இப்போது எதுவும் மிஞ்சவில்லை” என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஆரம்பத்தில் இந்தப் போர் 4 முதல் 5 வாரங்கள் வரை நீடிக்கலாம் எனக் கணிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அதற்கும் முன்னதாகவே அமெரிக்கா தனது இலக்குகளை எட்டிவிட்டதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். “ஈரான் இனி எவ்விதமான முட்டாள்தனமான காரியங்களிலும் ஈடுபடக்கூடாது; அப்படிச் செய்தால் அந்த நாடே வரைபடத்திலிருந்து மறைந்துவிடும்” என அவர் எச்சரித்துள்ளார். ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமெனியின் நியமனத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காத ட்ரம்ப், ஈரானை வழிநடத்தத் தகுதியான ஒருவரைத் தாம் மனதில் வைத்திருப்பதாகவும், அவர் மூலமே ஈரான் பொருளாதார ரீதியாக மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.