
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், காரசாரமான விவாதங்களுக்கு மத்தியில் நேற்று (09) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத், அப்பிரதேசத்தில் நிலவும் சுகாதார மற்றும் கல்வி சார்ந்த ஆளணி மற்றும் வளப் பற்றாக்குறைகள் குறித்து மிகத் தீவிரமாக வலியுறுத்தினார்.
பிரதேசத்தின் மிக முக்கியத் தேவைகளான கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் நீண்டகாலமாக நிலவும் ஆளணி பற்றாக்குறையினால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருத்துவக் கருவிகள் மற்றும் பணியாளர்களை நியமிக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறைசார்ந்த பிரச்சினைகள் குறித்துப் பேசப்பட்டபோது, கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இருப்பினும், இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வளம் மற்றும் ஆளணிப் பற்றாக்குறைகளை விரைவாக நிவர்த்தி செய்வதன் மூலமே பிரதேசத்தின் அபிவிருத்தியை உறுதி செய்ய முடியும் என சிறிநாத் எம்.பி வலியுறுத்தினார்.