கோறளைப்பற்று பிரதேச சபையின் செம்மண்ணோடை வட்டாரத்தில் 12.10.2025 ஜனாசா வைக்கப்பட்டிருந்த வீட்டை அண்மித்த வீதி ஒன்று இருளில் மூழ்கியிருந்த நிலையில், பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஊழியர்களின் துரித நடவடிக்கையினால் உடனடியாக வீதி விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டது.
செம்மண்ணோடை வட்டாரத்தைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் அவர்கள், குறித்த வீதியில் நிலவிய இருள் சூழ்ந்த நிலையைக் கண்டறிந்தார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, அவர் உடனடியாகக் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சு.சுதாகரன் அவர்களின் கவனத்திற்கு இதனைக் கொண்டு சென்றார்.
தகவல் கிடைத்தவுடன் இரவு பகல் பாராமல் செயற்பட்ட தவிசாளர் சு.சுதாகரன் அவர்கள் பிரதேச சபை உறுப்பினர் கபூர் மற்றும் ஊழியர்களுடன் இணைந்து துரித நடவடிக்கையை மேற்கொண்டார். இரவோடு இரவாக அந்த வீதிக்கு விரைந்து வந்த குழுவினர், இருளில் மூழ்கியிருந்த அந்தப் பகுதிக்கு வீதி விளக்கு வசதியை உடனடியாக ஏற்படுத்திக் கொடுத்தனர்.
இந்தச் செயற்பாடு குறித்து கருத்து தெரிவித்த பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.எல்.ஏ. கபூர் அவர்கள், “இந்த இரவு நேரத்தில் விரைந்து வந்து உதவிய கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர், சாரதி, மற்றும் ஊழியர்களுக்கு செம்மண்ணோடை மற்றும் மாவடிச்சேனை வட்டாரம் மக்கள் சார்பாகவும், ஜனாசா வீட்டார் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
சமூகத்தின் அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவதில் கோறளைப்பற்று பிரதேச சபை காட்டும் அர்ப்பணிப்பை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.



