காலி கடற்பரப்பிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ போர்க்கப்பலில் மொத்தம் 180 பணியாளர்கள் இருந்ததாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (04) நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், ஈரானியக் கப்பல் இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகியுள்ளமை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமைச்சர் வெளியிட்ட தகவல்களின்படி, விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த இலங்கை கடற்படையினர் மற்றும் மீட்புப் பிரிவினர் இதுவரை 30 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும் அவசர சிகிச்சைக்காகக் காலியில் உள்ள கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். ஏனைய 150 பேரின் நிலைமை குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் இல்லை என்பதால், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் (SAR) போர் அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானியக் கப்பல் இலங்கை கடல் எல்லையில் விபத்துக்குள்ளானது தொழில்நுட்பக் கோளாறா அல்லது தாக்குதலா என்பது குறித்த மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து காரணமாகக் கடலில் எண்ணெய் கசிவு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையும் (MEPA) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.